களுத்துறையில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை!

களுத்துறை – வெட்டுமகடே பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவர், காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை வெட்டுமகடே பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரை இலக்கு வைத்து, பின் தொடர்ந்து வந்த சொகுசு கார் ஒன்றிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர், அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையிலேயே, துப்பாக்கிதாரிகள் கொலைக்கு விடுத்த தப்பிச் செல்லப் பயன்படுத்திய கார், தெபுவன – நேபட தபால் நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடித் தேடுதல் வேட்டையின் போது, இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையது எனச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சிறிய ரக வாகனமும் களுத்துறை – மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் தங்களது தடயங்களை மறைப்பதற்காக இவ்வாறு வெவ்வேறு இடங்களில் வாகனங்களைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழு மோதல் அல்லது தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.