பருத்தித்துறை கடலில் 4 மீனவர்கள் மாயம்! – தேடுதல் வேட்டை தீவிரம்.
யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு கடற்றொழிலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் கடுமையான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கடலில் காணாமல்போயுள்ளனர் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் ஆகிய கரையோரப் பகுதிகளிலிருந்து நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில், இரண்டு தனித்தனிப் படகுகளில் இந்த நான்கு மீனவர்களும் கடற்றொழிலுக்காகக் கடலுக்குள் சென்றுள்ளனர்.
வழக்கமாக மறுநாள் அதிகாலையிலேயே கரை திரும்ப வேண்டிய இம் மீனவர்கள், இன்று வியாழக்கிழமை இரவு வரை நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினரால் பிராந்திய கடற்றொழிலாளர் சங்கங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு முதல் பருத்தித்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் கடுமையான சுழற்காற்று வீசி வருவதுடன், கடல் மட்டமும் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக அவர்கள் பயணித்த இரண்டு சிறிய ரகப் படகுகளும் திசைமாறிச் சென்றிருக்கலாம் அல்லது இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டுக் கரைக்குத் திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
காணாமல்போன தங்களது சக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பல படகுகளில் கடலுக்குச் சென்று தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, ஆழ்கடல் பகுதியில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையினரின் உதவியும் நாடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
