பொய் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்கும் அநுர போராட்டக் களத்தில் சிறீதரன் எம்.பி. கடும் சீற்றம் காணிகளை உடனே விடுவிக்குமாறும் வலியுறுத்து.
காணி விடுவிப்புத் தொடர்பில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது, மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவிசாய்த்து உடனடியாகக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று 6ஆவது வாரமாக முன்னெடுத்த கறுப்புக்கொடிப் போராட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் தங்களின் சொந்த மண்ணில் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. தற்போதும் அந்த மக்கள், தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தங்கி அவல வாழ்வை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் காணிகளை விடுவிப்போம் எனக் கூறி ஆட்சிப் பீடமேறிய அநுர அரசு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த அரசும், முன்னைய அராஜக அரசுகளைப் போன்றே செயற்படுகின்றது.
இந்தக் காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை. மக்களின் பூர்வீகக் காணிகளில் இராணுவத்தினர் பெரியளவில் விவசாயப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர். அங்கு தோட்டம் செய்து சந்தைகளில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இங்கு நேரில் வந்து பார்வையிட்டால், இங்கு இராணுவ முகாம்களுக்காகக் காணிகள் கையகப்படுத்தப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரியும்.
இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் விவசாயம் செய்து, தங்களின் வாழ்வாதாரத்தைத் தாங்களே தேடிக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், இங்குத் தனியார் காணிகளில் இராணுவ வைத்தியசாலையைக் கட்டி, தனியார் நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்கிறது. இந்தக் காணிகளை உடனடியாக விடுவியுங்கள்.
எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இதுவரை விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் விவரங்களையும், இன்னமும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு நாம் பாதுகாப்புத் தரப்பிடம் கோரியுள்ளோம். அதன் அடிப்படையில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான தொடர் அழுத்தங்களை நாங்கள் அரசுக்கு வழங்கவுள்ளோம்.
காலங்களை இழுத்தடிக்கும் வெற்று வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, ஜனாதிபதி இந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்குச் செவிமடுத்து, மக்களை உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.
