மொனராகலையில் பள்ளத்தில் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது இ.போ.ச. பஸ் – 26 பயணிகள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச.) பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ் மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31ஆம் கட்டை சந்தி பகுதியைச் சென்றடைந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கொடூர விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 26 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். விபத்து நடந்தவுடனே அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்த மொனராகலை பொலிஸார், விபத்துக்கான சரியான காரணம் ஓட்டுநரின் அதிக வேகமா அல்லது பஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.