தையிட்டி விகாரையைப் படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் இருவர் கைது! – பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை.

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களைப் பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி திஸ்ஸ விகாரையில் தற்போது விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், விகாரைக்குச் சற்றுத் தொலைவில் காணி உரிமையாளர்களினால் எதிர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழலில், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்குச் செல்வதாகக் கூறி, அங்கு சென்று சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளதுடன், அப்பகுதியைப் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

இதனை அவதானித்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்தே, இரு இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார், அவர்களைப் பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.