மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் போதகர் பரிதாப மரணம்! – மஸ்கெலியாவில் சோகம்.
நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தின் நடுத் தோட்டப் பிரிவில், பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிறிஸ்தவ மதப் போதகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பெரிய நடுத்தோட்ட கிறிஸ்தவ தேவாலயத்தின் மதப் போதகரான ராஜேந்திரன் கோபிநாத் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை மேலும் விஸ்தரிப்பு செய்வதற்காக, அதன் தரைத்தளத்தை வெட்டி நிலத்தைச் சமப்படுத்தும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது, போதகர் கோபிநாத் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென மேலிருந்த பாரிய மண் திட்டுக்கள் சரிந்து அவர் மீது வீழ்ந்துள்ளன.
இதில் அப் போதகர் முற்றிலும் மண்ணுக்குள் அகப்பட்டுப் புதையுண்டுள்ளார். உடனே அங்கிருந்த தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் இணைந்து பெரும் முயற்சிக்கு மத்தியில் அவரைப் பலத்த காயங்களுடன் மீட்டனர்.
ஆபத்தான நிலையிலிருந்த போதகர், உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி தோட்ட மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
