பெற்றோரின் கண்முன்னே இராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் மாயம்! – அம்பாந்தோட்டை கடற்பரப்பில் பெரும் சோகம்.
அம்பாந்தோட்டை மாவட்டம், ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று (30) நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்கள் இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போனவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள் எனப் பொலிஸாரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை தினத்தை முன்னிட்டுத் தங்களது பெற்றோருடன் களமெட்டிய கடற்கரைக்கு வருகை தந்திருந்த இம்மாணவர்கள், அங்குள்ள கடற்பரப்பில் இறங்கி மகிழ்ச்சியாக நீராடிக் கொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென எழும்பிய கடலலை, அவர்கள் மூவரையும் பெற்றோரின் கண் முன்னாலேயே ஆழ்கடலை நோக்கி இழுத்துச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஹுங்கம பொலிஸாருக்கு அவசரத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இலங்கைக் கடற்படையினரின் விசேட சுழியோடிகள் பிரிவு மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து காணாமல்போன மாணவர்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போதைய கடல்கொந்தளிப்பான காலநிலை தேடுதல் பணிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள போதிலும், மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன என்று ஹுங்கம பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
