புளாட் வதை முகாமில் நான் – சீலன் (பகுதி 7)”வெல்வோம்-அதற்காக”

புளாட் வதை முகாமில் நான் – சீலன் (“வெல்வோம்-அதற்காக” – பகுதி 7)

சாதிக்கூடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை…

ஒரத்தநாடு காரியாலயத்தில் அரசியல் வகுப்பு ஆரம்பித்தது. அப்போது என்னுடன் பலர் இணைந்து கொண்டனர். நோயுற்றவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும், அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். அவர்களில் பலர் அரசியல் வகுப்புகளில் அதிக நாட்டமும் காட்டினார்கள்.

அப்போ ஒரத்தநாட்டு காரியாலயத்தின் மலக்குழி நிரம்பி, அங்கு மலம் கழிக்க முடியாது போனது. அக்குழியை துப்பரவாக்க வேண்டிய கட்டாயத்தில், காரியாலயப் பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டனர். அக்குழியை துப்பரவு செய்ய அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளரான பம்மாத்து வாசுவும், மற்றைய பல விவகாரங்களை கவனித்து வந்த பெரிய மென்டிஸ்சு என்ற பாலமோட்டை சிவமும் வழிகாண வேண்டியிருந்தது. அவர்கள் தலித் ஒருவரை அழைத்து வந்தனர். அவர் அதைப் பார்த்த பின் அதற்கான கூலியை பேசிக் கொண்டிருந்தனர். அரசியல் வகுப்பு எடுத்து கொண்டிருந்த தோழர் தங்கராஜா எம்மிடம், ஏன் இதை நாமே செய்யக்கூடாது என்று கேட்டார்.

அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்தால் என்ன? இது போன்ற பல கேள்விகளை எம்மை நோக்கி எழுப்பினார். அப்போது எம்முடன் இருந்த ஆனந்தன் என்பவர், நாம் இதைச் செய்வோம் என்றார். இதுவும் ஒருவித பயிற்சி தான் என்றார். பின்னர் என்ன, நாம் எல்லோருமே அதை துப்பரவு செய்தோம். நான் இச்சம்பவத்தை இங்கு குறிப்பிடக் காரணம், சாதிகள் இல்லை அவற்றை ஒழிக்க நாம் பாடுபடவேண்டும் என்று கூறிய தலைமை உறுப்பினர்கள், என்ன செய்கின்றனர் என்பதை விளக்கத்தான். அவர்கள் தமக்கு இவ்வாறன பிரச்சனைகள் எழுந்தவுடன், அவர்களின் சிந்தனை எங்கு சென்றது. அது சாதிக்கூடாகவே தீர்வு காணும் வழிமுறையை நாடியது.

ஒருசில நாட்களில் காரியாலயத்தில் தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்கு என்று தனி ஒரு முகாம் அமைப்பது என்று எண்ணம் ஏற்கனவே இருந்ததால், தனி முகாம் அமைக்கப்பட்டது. அம்முகாமிற்கு ஏற்கனவே அரசியல் வகுப்புகளில் பங்கு கொண்ட என் போன்றவர்களே முதலில் அனுப்பப்பட்டனர். அம்முகாமை பலரும் தங்கக் கூடிய வகையில், பக்கத்துக் கிராம மக்களின் உதவியுடன் வடிவமைத்தோம். அந்த முகாமிற்கு அன்ரனி என்பவர், முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அம் முகாமிற்கு ஏச் (H) முகாம் என பெயர் வைக்கப்பட்டது. பிற்காலத்தில் அதை சி (C) காம் என்றும் அழைத்தார்கள்.

தோழர் தங்கராஜா

அங்கே நாம் அனைவருமாக, கிட்டத்தட்ட 70 தோழர்கள் வரை அப்போது இருந்தோம். அத்துடன் நீண்ட நாட்கள் சுகயீனப்பட்டோரையும், பொக்களிப்பான், சின்னமுத்து போன்ற தொற்று நோயுள்ளவர்களையும் எமது முகாமிற்கு மாற்றினார்கள். அவ்வாறு வருபவர் களில் பலர் திரும்பிச் செல்ல மறுத்தனர். அதனால் எமது முகாமின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எனது நினைவுக்கு எட்டியவரை 112 பேர் வரையில் இறுதியாக ஏச் முகாமில் இருந்தோம்.

இந்திய இராணுவத்தின் உத்தரப்பிரதேச மாநிலத் தளங்களில் யுபி(UB)யில் பயிற்சி பெற்ற உதயன், ஜிம்மி இருவருமே எமக்கான வெளி வேலைகளைச் செய்தனர். ஓரத்தநாட்டு முகாமுக்கு ஒவ்வொரு நாளும் சென்று வருவது அவர்களின் வழக்கம்.

இவர்களை எவரும் எதுவும் கேட்க முடியாது. காரணம் தாம் நேரடியாக அனைத்து முகாம் பொறுப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கூறுவார்கள். எமது முகாம் பொறுப்பாளராக அன்ரனி இருந்த போதும், எமது முகாமை வழிநடத்துவது தோழர் தங்கராஜா அவர்களே . அவர் எமது முகாமை சுய கட்டுப்பாட்டு முகாமாக மாற்றினார்.

அதாவது சமைத்த சாப்பாட்டை மற்றவர் பரிமாறாது, ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான உணவை தாமே எடுத்து சாப்பிடுவது. இறுதியாக சாப்பிடாத தோழருக்கும் தேவையான உணவு இருக்க வேண்டும் என்றும், உணவுகள் தேவையற்ற முறையில் விரையம் செய்யாத வகையில் பக்குவப்படுத்தையும் ஏற்படுத்தினார். சிலர் தேவையற்று உணவை விரையம் செய்தால், அவர் தாமாகவே அதற்கான சுயவிமர்சனத்தை முன்வைத்து அதற்கான தண்டனையையும் இரவுநேர ஒன்றுகூடலில் செயற்படுத்துவார்கள். இவ்வாறு பல பிரச்சனைகளை விமர்சனம், சுயவிமர்சனம் என்ற வகையில் புதிய முரண்பாடுகள் எழாதவாறு தீர்த்து வைத்து, எங்களுக்கு அரசியல் போதிப்பதையும் அவர் தொடர்ந்தார்.

ஒருமுறை தோழர் சோசலிசம் சிறி, எமது முகாமிற்கு அருகாமையில் வசித்த இந்தியப் பெண்ணைக் காதலித்தார். இது முகாமில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது, அது தொடர்பான விமர்சனத்தை எமது தோழர்கள் அவரிடம் முன்வைத்ததுடன், அவரின் சுய விமர்சனத்தை கோரினர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்த வேளையில் விம்மிவிம்மி அழுதார்.

அவரின் சுயவிமர்சனத்தை ஏற்றுக்கொண்ட எம்மிடையே, இவ்விடையம் அனைத்து முகாம்களின் பொறுப்பாளருக்கோ அல்லது ஒரத்தநாட்டுக்கோ தெரிய வந்தால் சோசலிசம் சிறி வதைமுகாமிற்கு அனுப்பப்படலாம் என்ற ஐயம் ஏற்பட்டது. மேலும், வேறு முகாம்களிலிருந்து எமது முகாமிற்கு வரும் தோழர்கள் முகாம்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி கூறுவதுடன், தமது முகாம்களில் நடைபெறும் முகாம் பொறுப்பாளர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளையும், தோழர்கள் மீதான அவர்களின் வன்முறைகளையும் எம்மிடம் கூறினர். இது தொடர்பாக நாம் என்ன செய்வது என்ற கேள்வியை, இரவு நேர ஒன்று கூடலில் எழுப்பினர். இவ்வாறான விவாதங்களையும், சோசலிசம் சிறி போன்றவர்களின் விடயங்களையும் நாம் அனைத்து முகாம் பொறுப்பாளருக்கு உடனடியாகத் தெரிவிக்கக் கூடாதென முடிவெடுத்தோம். மாறாக எமது முகாமில் நடக்கின்ற அனைத்து விடயங்களும், நாளுக்கு நாள் ஓரத்தநாட்டு முகாமுக்கு தெரிந்த வண்ணமே இருந்தது.

இந்நிலையில் வல்வெட்டித்துறையில் இலங்கை விமானப் படையால் குண்டுகள் வீசப்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிந்து கொண்ட நாம், அதற்கும் நாம் என்ன செய்வது என்ற விவாதத்தைத் தொடங்கினோம். ஏன் பயிற்சி முடிந்து லெபனானில் இருந்து திரும்பியவர்களும், யுபி(UB)யில்  இருந்து திரும்பியவர்கள் உட்படப் பலரும் இங்கு தரித்து நிற்பதை விடுத்து, தளத்தில் இறங்கி போராடினால் என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. இதன் போது பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர்.

அதன் முடிவாக நாம் இதனை எதிர்த்து போராட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் அமைப்புள் நடக்கும் பிரச்சனைகள், அமைப்பின் போராட்டத் தளத்தில் இயங்காத தன்மை போன்ற விடையங்களை உள்ளடக்கி ஒரு உள்ளக விமர்சன மகஜர் அறிக்கை எழுதி அனுப்புவதென்று அவ் விவாதத்தின் நிறைவாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு நாம் விவாதங்களை நடத்தும் வேளையில், எமது முகாமைத் தவிர்ந்த பல இடங்களில் “ஒரு விடுதலைப் போராட்டத்தில் அரசியலா இராணுவத்தை கட்டுப்படுத்துவது அல்லது இராணுவமா அரசியலைக் கட்டுப்படுத்துவது” என்ற பிரச்சனை எழுந்து நின்றது. இது தொடர்பாகவும் எமது முகாமில் ஒரு நீண்ட விவாதத்தை நடத்தினோம். இதில் என்ன வேடிக்கை என்றால், ஒரு சமூக விடுதலையை இடது சாரியக் கோட்பாட்டு ரீதியாக அங்கீகரித்த விடுதலை இயக்கத்தில், இவ்வாறான பிரச்சனை எழும்பியது என்பதே வெட்கத்துக்குரிய விடயம்.

ஆனால் பின்தளத்தில் இருந்த பல அரசியல் ஆசான்களும், தத்துவார்த்த விஞ்ஞானிகளும், இவைகளைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக இது போன்ற விவாதங்களைத் தடுக்க, சுத்த இராணுவக் கண்ணோட்டத்தில் ஏச் முகாம் தவிர்ந்த மற்றைய முகாம்களில் இருந்த சிவப்புப் புத்தகங்களை அகற்றி, அரசியல் பேசுவதையே தடைசெய்தனர்.

தொடரும் …..

சீலன்


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.