விபத்தில் சிக்கிய இளைஞரைத் தன் வாகனத்திலேயே ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பிக்க ரணவக்க.

வெசாக் பௌர்ணமி தினமான நேற்று ரிதிகம – குருநாகல் வீதியின் கரந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த தம்பதியினரில் இளைஞர் ஒருவர் வீதியோரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதன்போது, அந்த வீதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தி, காயமடைந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், உடனடியாகத் தனது வாகனத்திலிருந்து இறங்கி, ஆபத்தான நிலையிலிருந்த இளைஞரைத் தனது உத்தியோகபூர்வ வாகனத்திலேயே ஏற்றி, மிக விரைவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

அவசர விபத்துகளின் போது பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் இந்த உடனடி மனிதாபிமானச் செயல் அங்கிருந்த பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.