வவுனியாவில் 10 கோடி ரூபாவுக்கு அதிக பணத்துடன் நகைக்கடை வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு! – சிங்கப்பூருக்குத் தப்பியோட்டம் எனச் சி.ஐ.டி. விசாரணையில் தகவல்.

வவுனியாவில் 10 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார் என்று கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்ததோடு, ‘கௌரி ஜுவல்லர்ஸ்’ எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வந்த வர்த்தகரே, பல வர்த்தகர்களிடம் 10 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இளையதம்பி சுகுமார் (வயது 41) என்ற இந்த வர்த்தகர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வவுனியாவிலுள்ள பல நகைக்கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்தமையுடன், வர்த்தகர்களுடன் நீண்டகாலமாக நம்பகமான முறையில் கொடுக்கல் – வாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவராவார்.

தலைமறைவாகியுள்ள இந்த வர்த்தகர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தோர், கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கோ அல்லது 0774101802 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்புகொண்டு அறியவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.