ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு!

“காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

சமூக – பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையைப் பேணி, ஆரோக்கியமான சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் தற்போதைய அரசின் சுற்றாடல் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிக்கு இலங்கை தற்போது தீவிரமாகப் பங்களித்து வருகின்றது.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரை சுற்றுச்சூழல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் போது ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய 5 வனப்பகுதிகள், வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.

மேலும், மேம்படுத்தப்பட்ட தேசிய பசுமை அறிக்கை வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மாகம மணல் மேட்டுப் பகுதி கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தால் ‘பாதிப்புக்குள்ளாகும் பிரதேசம்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் ‘குடா புபுல’ நீர் ஊற்று மற்றும் ‘கபுரெல்ல’ வெந்நீர் சதுப்புநிலப் பகுதி ஆகியனவும் வன ஒதுக்கீடுகளாக அறிவிக்கப்பட்டன.

“சொபா” மற்றும் “சொபா கெத” ஆகிய சுற்றுச்சூழல் சஞ்சிகைகளின் புதிய பதிப்புகளும், பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் பற்றிய நூலும் இதன்போது வெளியிடப்பட்டன. அத்துடன், இம்முறை தேசிய சுற்றுச்சூழல் தின நிகழ்வு, “பூச்சிய கார்பன் உமிழ்வு” திட்டமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. காலநிலை மாற்றப் பிரிவு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி,

“தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் நடத்தப்படும் இரண்டாவது உலக சுற்றாடல் தினம் இதுவாகும். எம்மால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், கடந்த 2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தில் 5 காடுகளையும், ஒட்டுமொத்தமாக அந்த ஆண்டில் 29 காடுகளையும் நாம் வன ஒதுக்கீடுகளாகப் பிரகடனப்படுத்தினோம்.

தொடர்ந்து 2026 உலக வன தினத்தில் மேலும் 50 காடுகளும், அமைதிக்கான நடைபயணத்துக்கு இணையாக 2 காடுகளும், இன்று பிரகடனப்படுத்தப்பட்ட 5 காடுகளும் சேர்த்து, வெறும் ஒரு வருட காலத்திற்குள் 86 காடுகளைப் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாகப் பிரகடனப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. இது எமது அரசின் மாபெரும் வெற்றியாகும்” என்று குறிப்பிட்டார்.

யானை – மனித மோதலுக்குத் தீர்வு காண்பது குறித்து அமைச்சர் மேலும் பேசுகையில்,

“அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கியதாக மூன்று யானை வழித்தடங்களை விடுவிப்பதற்கு இன்று எம்மால் முடிந்துள்ளது. அத்துடன், அம்பாந்தோட்டை யானை முகாமைத்துவப் பகுதிக்குரிய சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு, செயல்பாட்டுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்புத் திணைக்களங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதிகாரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் கெப் ரக வாகனங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

வளர்ப்பு யானைகளை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதிய கொள்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதுடன், பின்னவல யானைகள் சரணாலயத்தை ஆராய்ச்சி மையமாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் சுற்றாடலைப் பாதுகாப்பது தொடர்பாகக் காணப்படும் காலாவதியான சட்டங்களைத் திருத்துவதற்கும் நாம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.” – என்றார்.

இந்நிகழ்வில் சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயகொடி, அமைச்சின் பதில் செயலாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.எல்.ஆர்.பி. மாரசிங்க உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.