அச்சுவேலியில் 230 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! – எஸ்.ரி.எவ்வைக் கண்டு தப்பியோடிய கும்பலுக்கு வலைவீச்சு.

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனமொன்றில் சிலர் வந்து இறங்கியுள்ளதாகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது, அங்கு நின்ற கும்பல் விசேட அதிரடிப் படையினரைக் கண்டதும், தங்களின் வாகனத்தில் ஏறி அவ்விடத்திலிருந்து அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, பற்றைக்காட்டுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.