மோசமான வானிலை, கடல் கொந்தளிப்பு: சிறிய படகுகள் கடலுக்குச் செல்லத் தடை! – மீனவர்களுக்குக் கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை.

https://we.tl/t-0W5ca8Rq7gmwpHsx

“நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறிய மற்றும் பாரம்பரிய படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஊடாகக் கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாகக் கடல் அலைகள் மிக உயரமாக எழும்பும் அபாயம் காணப்படுகிறது. எனவே, குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் சிறிய மற்றும் பாரம்பரிய படகுகள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்லக் கூடாது என்று பணிப்பாளர் நாயகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கற்பிட்டியிலிருந்து சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கவும், அலைகள் உயரவும் வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் நிலவும் வானிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். பாதுகாப்பான சூழல் இருந்தால் மாத்திரமே மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்றும், அபாயகரமான சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள மீனவ சமூகத்தினரை நோக்கிப் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள விசேட நினைவூட்டலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“மீன்பிடித் தொழிலுக்காகப் புறப்படுவது முதல், கடலில் மீன்பிடிக்கும் காலம் மற்றும் மீண்டும் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பும் வரையிலான முழுமையான காலப்பகுதியில் ‘உயிர்காக்கும் அங்கிகளை’ அணிந்திருப்பது கட்டாயமாகும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது, உயிர்காக்கும் அங்கிகளை முறையாக அணிந்திருந்த மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. அவ்வாறு செய்யாதவர்கள் தங்களது பெறுமதியான உயிர்களை இழக்க நேரிட்டது என்பதை மீனவர்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.” – என்றார்.

எனவே, வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றால் அவ்வப்போது வெளியிடப்படும் அவசர வானிலை அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், தங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக்கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.