கொழும்பு – தலவத்துகொட பதுதியிலுள்ள உணவகத்தில் தீ விபத்து! மூவர் பரிதாப மரணம்!!

கொழும்பு – தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, கடுமையான தீக்காயங்களுக்குள்ளான மூன்று பேர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை வேளையில் குறித்த உணவகக் கட்டடத்திலிருந்து திடீரெனப் புகை மூட்டத்துடன் கூடிய பயங்கரத் தீ சுவாலைகள் எழும்பியுள்ளன.

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன், மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைவாக அனுப்பப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் உணவகத்தில் பரவிய தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தத் விபத்தின் போது உணவகத்துக்குள் சிக்கி, உடலில் கடுமையான தீக்காயங்களுக்குள்ளான மூன்று பேர் தீயணைப்புப் படையினரால் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் மூவரும் அவசர அம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட அவசர சிகிச்சை பலனின்றி அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவு காரணமாகவே இந்தத் கொடூரத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகளிலும், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியும் நோக்கிலும் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து தலங்கம பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.