ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய ஆப்பு! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை.

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியல் இலாபங்களுக்காகப் போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் விசாரணைகள் அதன் போக்கில் நேர்மையாக முன்னோக்கி நகரும்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

சி.ஐ.டி. விசாரணைகளுக்குத் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

“குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய சுயாதீன விசாரணைகளுக்கு எவரேனும் இடையூறு விளைவிக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்துகொண்டாலோ, அல்லது அது குறித்து உண்மைக்குப் புறம்பான போலித் தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட்டாலோ, அது குறித்துத் தகுந்த சான்றுகளுடன் நீதிமன்றத்துக்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர், சட்டத்தை மீறிய அத்தகைய நபர்களுக்கு எதிராக நீதிமன்றமே தகுந்த உத்தியோகபூர்வ தீர்மானங்களை எடுக்கும்.

நாட்டில் ஏதேனும் முக்கிய ஊழல் அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடையும் போது, திட்டமிட்ட சில போராட்டங்கள் மூலம் பொதுமக்களின் அவதானத்தை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு தவறான கலாசாரம் கடந்த காலங்களில் வளர்ந்து வந்துள்ளது. இத்தகைய திசைதிருப்பல் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் அனைத்தும் மிக விரைவாக இறுதி இலக்கை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” – என்றார்.

அரசியல் தூண்டுதலால் நடத்தப்படும் தற்காலிகப் போராட்டங்கள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சாடியதாவது:-

“வெறும் 12 அல்லது 18 பேர் கொண்ட சிறிய குழுக்களை வீதிகளில் அமர்த்தி, கூச்சலிட்டுப் போராடுவதனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டபூர்வ விசாரணைகளுக்கு எந்தவொரு பாதிப்போ அல்லது தடைகளோ எற்படப் போவதில்லை. எமது அரசின் கீழ் எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, சட்டத்தின்படி விசாரணைகள் சரியான முறையில் நேர்மையாக முன்னோக்கி நகரும் என்பதை நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் உறுதி கூறுகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.