பிக்கு சமூகத்தை அவமதிப்போர் மீது உடனடியாகச் சட்டம் பாய வேண்டும்! – அரசுக்கு அக்மீமன தயாரத்ன தேரர் அழுத்தம்.
“இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அதனைப் போஷிப்பதும் அரசின் முதன்மைப் பொறுப்பாகும். எனவே, சமூக ஊடகங்கள் வாயிலாகத் திட்டமிட்ட முறையில் பிக்கு சமூகத்தைக் கொச்சைப்படுத்தி வரும் மத எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
மகா சங்கத்தினருக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக மத எதிர்ப்பு மற்றும் பௌத்த எதிர்ப்பு கருத்துகளை முன்வைக்கும் குழுக்கள் மிகத் திட்டமிட்ட வகையில் இயங்கி வருகின்றன. நாட்டில் உள்ள சில பிரதான அரசியற் கட்சிகளின் கொள்கைகளில்கூட ‘மதமற்ற தன்மை’ பகிரங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் இந்நாட்டில் வீழ்த்தும் நோக்கில் பல்வேறு சூட்சுமமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மகா சங்கத்தினரிடையே (பிக்குகள்) ஏற்படும் மிகச் சிறிய தனிப்பட்ட விடயங்களைக்கூடப் பூதாகரமாக்கி, முழு பிக்கு சமூகத்தையும் அவமதிக்கும் வகையிலும், சாசனத்திற்குப் பெருங்களங்கம் விளைவிக்கும் வகையிலும் இவர்கள் பொதுவெளியில் செயற்படுகின்றனர்.
புத்த பெருமானின் காலத்தில்கூட சாசனத்தின் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்காக விநய விதிகள் (ஒழுக்கக் கோட்பாடுகள்) பிறப்பிக்கப்பட்டன. ஆரம்பக் காலத்தில் சாசனத்துக்குள் நுழைந்தவர்கள் துறவறத்தின் உண்மையான மேன்மையை உணர்ந்து வந்தனர். ஆனால், பின்னர் வந்த காலங்களில் பல்வேறு சமூக மற்றும் குடும்ப நெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் தங்களுக்குரிய பாதுகாப்பைத் தேடி சாசனத்துக்குள் வந்தனர்.
இத்தகைய சூழலில்தான் புத்த பெருமான் சாசனத்தின் நீண்டகாலப் பாதுகாப்புக்காகத் கடுமையான ஒழுக்க விதிகளை வகுத்தார். இவ்வாறான வரலாற்று உண்மைகளைச் சரிவர அறியாத, பௌத்த தர்மம் குறித்து எவ்வித அடிப்படைப் புரிதலும் இல்லாத நபர்கள், இன்று பிக்கு சமூகத்தை மிக மோசமாக விமர்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
நான் சிறு வயதிலேயே புத்த பெருமானின் கருணை மீதான ஈர்ப்பினாலும், மதிப்பினாலும் துறவறத்தை மேற்கொண்டேன். சாசனத்துக்குள் நுழையும் சிறுவர்களுக்கே ஒழுக்கநெறிகள் மற்றும் சீலங்கள் முறையாகக் கற்பிக்கப்படுகின்றன. இவ்வாறான புனிதமான பின்னணியில், ஒருசில பிக்குகளின் தனிப்பட்ட தவறுகளைச் சாட்டாக முன்வைத்து, முழு பிக்கு சமூகத்தையும் ஒட்டுமொத்தமாகக் கொச்சைப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செயற்படும் நபர்கள் மீது அரசு ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது?
சில நபர்கள் வெளிநாடுகளில் இருந்து அல்லது பிற மதத் தீவிரவாதக் குழுக்களில் இருந்து பெருமளவு நிதி பெற்றுக்கொண்டு பௌத்த சாசனத்தை அழிக்க முற்படுகின்றார்களா என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுகின்றது. பௌத்த பிக்குகளாகிய எங்களது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.” – என்றார்.
