உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரவி செனவிரத்ன, ஷானியிடம் முதலில் விசாரிக்க வேண்டும்! – முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்து.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளையும், அதன் திட்டமிட்டாளர்களையும் கண்டறிவதற்கு முன்பாக, அக்காலத்தில் உயர் பதவிகளை வகித்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரிடம் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறைத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும், இந்தத் கொடூரமான தாக்குதலை அவர்கள் ஏன் தடுக்கத் தவறினார்கள் என்பது குறித்த விவரங்கள் கண்டறியப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில், தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடமையாற்றிய கீழ்மட்ட உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, உயர் அதிகாரிகள் வரை உள்ள அனைவரிடமும் அது விரிவாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அரசி செயற்பாடுகள் குறித்துப் பார்க்கையில், ஒரு சுயாதீன அதிகாரிகள் குழுவை நியமிப்பதாகவே அவர்கள் முதலில் கூறியிருந்தனர். ஆனால், தற்போது கர்தினால் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைக்கு இணங்கவே ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்று நாடாளுமன்றத்தில் அரச தரப்பு அமைச்சர் ஒருவர் கூறி வருகின்றார்.

எனவே, தற்போதைய உயிர்த்த ஞாயிறு விவகார விசாரணையானது ‘வழக்கும் சாமி உடையது, பொருளும் சாமி உடையது’ என்ற பழமொழிக்கு இணங்க, முற்றிலும் பாரபட்சமான ஒரு சூழ்நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.” – என்றார்.
………………………

Leave A Reply

Your email address will not be published.