பிரபாவின் மகன் பாலச்சந்திரன் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்?

நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் மகன் குறித்துப் பேசும் ரவூப் ஹக்கீம், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ அமைப்பால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளின் சோக வரலாற்றை மறந்துவிட்டாரா என்று அக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை முன்வைத்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“எந்தவொரு பிள்ளையும் தனது பெற்றோரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கோ அல்லது ஆயுதச் செயல்களுக்கோ பொறுப்பாகக் கருதப்படக் கூடாது என்பது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படை விதியாகும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிரபாகரனின் மகனைப் பற்றி மட்டும் நாடாளுமன்றத்தில் பேசும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அவரது நேரடி உத்தரவின் பேரில் யுத்த காலத்தில் துடிதுடிக்கக் கொல்லப்பட்ட ஏனைய ஆயிரக்கணக்கான சாமானிய சிறுவர்கள், பொதுமக்கள் மற்றும் பலவந்தமாகப் போரில் இணைக்கப்பட்ட சிறுவர் போராளிகளின் அவல நிலை குறித்தும் பேச வேண்டும்.

இலங்கையின் ஊடக மற்றும் அரசியல் அரங்குகளில் ‘போட்டி பாதிக்கப்பட்ட நிலை’ என்ற பாகுபாடான சூழ்நிலையே காணப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வலி மற்றும் துயரங்கள் மட்டும் தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக நினைவுகூரப்படும் வேளையில், மற்றுமொரு தரப்பான முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுப் பேரழிவுகள் திட்டமிட்டுக் கடந்து செல்லப்பட்டு மௌனமாக்கப்படுகின்றன. இது சமநீதிக்கு அப்பட்டமான இழுக்காகும்.

கடந்த 1990 ஜூன் 11 அன்று இந்திய அமைதிப்படை நாட்டை விட்டு வெளியேறிய சூழலில், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் நிபந்தனைக்கு இணங்க, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 600 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தனர். அவ்வாறு பாதுகாப்பை நம்பிச் சரணடைந்த அரச அதிகாரிகளே காடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது சாதாரண போர்க்கால மரணமல்ல, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாக ஆராயப்பட வேண்டிய கொடூர சம்பவமாகும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்கள் கடந்த 36 ஆண்டுகளாக நீதி, உண்மை மற்றும் இழப்பீட்டை எதிர்பார்த்துக் கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றன. பல குடும்பங்களுக்கு அரசிடமிருந்து இன்னமும் முறையான பதில்களோ அல்லது தகுந்த வாழ்வாதார அங்கீகாரமோ கிடைக்கவில்லை.

எனவே, தற்போதைய அரசு இந்த வரலாற்றுப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் உடனடியாக ஒரு சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகுதியான அரச வேலைவாய்ப்புகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

அத்துடன், 1990 ஜூன் 11 படுகொலையில் தேசத்துக்காக உயிர்நீத்த முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் வகையில் தேசிய நினைவுச் சின்னம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும். வருடாந்தம் இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் தேசிய மட்டத்தில் உத்தியோகபூர்வமாக நடத்தப்பட வேண்டும் என்பதுடன், எதிர்காலச் சந்ததியினர் உண்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு பாடசாலை வரலாற்றுப் பாடப்புத்தகங்களிலும் இந்தச் சம்பவம் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஒரு பிள்ளையின் உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, நாட்டுக்காகப் படுகொலை செய்யப்பட்ட தந்தையரின் நினைவைப் பாதுகாப்பதும் அதே அளவு முக்கியமானது.

நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சமமான நினைவஞ்சலியும், நீதியும் வழங்கப்படும் போதுதான் இலங்கையில் உண்மையான தேசிய நல்லிணக்கம் உருவாகும்.” – என்றும் கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.