3 கோர விபத்துகள்! மூவர் பரிதாபப் பலி!! – 2 சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மூன்று தனித்தனி வாகன விபத்துக்களில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கள் தொடர்பில் மூன்று வாகனச் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை – வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் நேற்று ஒரு வினோதமான விபத்து நேர்ந்துள்ளது. அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்று சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை, டிரக்டர் வாகனத்தின் உதவியுடன் இழுப்பதற்காக வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி ஒன்று கட்டப்பட்டிருந்தது.
இதன்போது, வெஹிகல திசையிலிருந்து கடுவலை நோக்கித் தனது 14 வயதுடைய இரட்டைப் பிள்ளைகளை பின்னால் அமரவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர், வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கேபிள் கம்பியை அவதானிக்காது அதில் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற வெஹிகல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது இரு பிள்ளைகளும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய டிராக்டர் ஓட்டுநரும், லொறியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரிகம – நால வீதியின் ஹகுருகும்புக பகுதியில் நேற்று பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடது பக்கமாக நடந்து சென்ற பாதசாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி உடனடியாக மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்விட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்விட்ட – கிரிபத்கல்ல வீதியின் கொடமட பகுதியில் நேற்று கிரிபத்கல்ல திசையிலிருந்து பயணித்த ஓட்டோ ஒன்று, எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டோ சாரதியும், அதன் பின்னால் பயணித்த இரண்டு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் தெல்விட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டோ சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெல்விட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
