யாழில் ரயிலுடன் மோதி இராணுவச் சிப்பாய் பலி! – தற்கொலையா எனப் பொலிஸார் தீவிர விசாரணை.

யாழ்ப்பாணம், அரியாலை – நெளுக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி இராணுவச் சிப்பாய் அண்மையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். எனினும், விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் நீண்ட காலமாக மீண்டும் கடமைக்குத் திரும்பாமல் இருந்துள்ளார். இந்நிலையிலேயே, அவர் நீண்ட நாள்களின் பின்னர் இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்குச் சென்று கடமையைப் பொறுப்பேற்க முயன்றுள்ளார்.

இதன்போது, உரிய கால எல்லையைத் தாண்டி நீண்ட நாள்கள் கடமைக்குத் சமூகமளிக்காமை குறித்துப் பலாலி முகாமின் உயர் இராணுவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன், இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்துக்கு நேரில் சென்று உத்தியோகபூர்வமாக விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் அவருக்குப் பணித்துள்ளனர்.

அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று பலாலி இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய அந்தச் சிப்பாய், மதியமளவில் அரியாலை – நெளுக்குளம் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பாதையினூடாகப் பயணித்த ரயிலுடன் மோதியே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தலைமையகத்துக்குச் சென்று விளக்கம் கொடுக்கப் பணித்தமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.