மனிதனும் தெய்வமாகலாம் : John Durai Asir Chelliah

இதைப்போல ஒரு நவம்பர் மாதத்தில்தான் நாட்டையே பெரும் குழப்பத்தில் ஆழ்த்திய அந்த பணமதிப்பிழப்பு சம்பவம் நடந்தது.

அதே நேரத்தில் சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியம் கூட இந்த நாட்டில் நடந்தது.

2016 நவம்பர் 8 .

இரவு எட்டு மணி.

“உங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்.”

பதறிப் போனது இந்தியா.

அடுத்த நாள் காலை.

அவசரம் அவசரமாக வங்கி வாசல்களில் மக்கள் கூட்டம் முட்டி மோதியது, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக !

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட ஒரு சில நாள்களில் தங்களிடமிருந்த பணத்தை மாற்ற முடியாமல் வரிசையில் நிற்கும்போது மயங்கி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது.
அதே 2016 நவம்பரில் இன்னொரு அதிரடி அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

வெளியிட்டவர் – கொச்சி அருகே காக்கநாடு மார்ட்டின் சைரோ மலபார் கிறிஸ்தவ தேவாலயத்தின் பாதிரியார்.

வழக்கமான ஞாயிறு பிரார்த்தனை முடிந்த பின் சற்று நேரம் அமைதியாக இருந்த அந்த ஆலயத்தின் பாதிரியார், சர்ச்சில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார்.

அனைவரின் முகங்களிலும் குழப்பமும் கவலையும்.
கனிவான குரலில் அந்த பாதிரியார் இப்படி அறிவித்தார்.

“அன்பானவர்களே !
நமது தேவாலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும்.”
மக்கள் எதுவும் புரியாமல் அவர் சொல்வதை உற்று கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்தார் பாதிரியார் :
“இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அவசரமாக பணம் தேவைப்படுபவர்கள்,
மத வேறுபாடு எதுவும் இன்றி
தங்கள் தேவைக்கு ஏற்ப நமது சர்ச் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது மீண்டும் கொண்டு வந்து உண்டியலில் போட்டால் போதும்.”

உண்டியல்கள் திறக்கப்பட்டன.

அவ்வளவுதான் !

அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்து அங்கே இருந்த ரூபாய் நோட்டுகளை அள்ளிக் கொண்டு சென்றார்கள் அப்பாவி பொது ஜனங்கள்.

ஒரு சில நிமிடங்களுக்குள் உண்டியலில் இருந்த செல்லாத ரூ.500, 1000 தவிர மீதி இருந்த அத்தனை பணமும் காலியாகிவிட்டது.

“எதற்காக ஃபாதர் இப்படி செய்தீர்கள் ?” என்று கேட்டதற்கு அந்த பாதிரியார் கண் கலங்க சொன்ன பதில் :
“இது ஒரு சிறிய ஆலயம்தான்.

நாங்கள் செய்ததும் மிகச்சிறிய ஒரு செயல்தான்.

நாட்டில் பலரும் மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமலும் அன்றாட உணவுக்கான அரிசியை வாங்க கூட காசில்லாமலும் பணத்தட்டுப்பாட்டால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் அரிசி இல்லாமல் சிரமப்படும்போது ஆண்டவருக்காக உண்டியலில் லட்சக்கணக்கான பணம் இருந்து என்ன பயன் ?

இது மக்களின் பணம்தான்.

அதனை அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறோம்.”

“சரி ஃபாதர். யார் யார் எவ்வளவு எடுத்துச் சென்று இருக்கிறார்கள் என்பது..?”

“தெரியாது. அதற்கான கணக்கையும் நான் வைத்து கொள்ளவில்லை. மனிதாபிமானம் உள்ள எல்லோரும் தாங்கள் எடுத்த பணத்தை திரும்பவும்
உண்டியலில் கொண்டு வந்து போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

இந்த உண்மைச் சம்பவம் நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தி இதுதான் :
“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்…”

Leave A Reply

Your email address will not be published.