சர்வதேச அவதானத்துக்கு மத்தியில் இன்று செம்மணியில் நீதி அமைச்சர் – ஓ.எம்.பி. உயர் பிரதானிகளும் வருகை; அகழ்வுப் பணிகளை நேரில் ஆராய்வர்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் உயர் பிரதானிகள் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விசேட விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்று முன்னெடுக்கப்படும் இந்த விஜயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் நேரில் சென்று பார்வையிடுவதற்கான சட்டபூர்வ அனுமதியைக் கோரி, கடந்த 16ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் சட்டத்தரணிகளால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசேட நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அன்றைய தினம் பிற்பகலே இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை நீதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கியிருந்தது.

நீதிமன்ற அனுமதியின் பிரகாரம், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு நேரில் வருகை தரவுள்ளனர்.

இதன்போது, அங்கு தற்போது இடம்பெற்று வரும் மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாராய்ச்சிகள், என்புத் தொகுதிகள் மீட்புப் பணிகள் மற்றும் சான்றுப் பொருள்கள் சேகரிப்பு நடைமுறைகளை அவர்கள் நேரில் பார்வையிட்டு, அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இலங்கையில் மனிதப் புதைகுழி விவகாரங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச ரீதியில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள பின்னணியில், நீதி அமைச்சரின் இந்தச் செம்மணி விஜயம் அரசியல் மற்றும் சட்டத் துறையினரிடையே பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.