இரட்டைச் சம்பள மோசடி விவகாரம்: கோட்டாவின் முன்னாள் செயலர் சுகீஸ்வர பண்டார கைது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, ஜனாதிபதி செயலகத்தின் நிதி மற்றும் அரச சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை முன்னிலைப்படுத்தியபோதே, நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்துக்கு முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சுகீஸ்வர பண்டார கடந்த 2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளார். அதே காலப்பகுதியில், அவர் விதிகளுக்குப் புறம்பாக அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவ்வாறு ஒரே காலப்பகுதியில் இரு உயர் பதவிகளைத் தன்வசம் வைத்திருந்த அவர், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு பதவிகளுக்குரிய சம்பளப் பணத்தையும் சட்டவிரோதமான முறையில் இரட்டையாகப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுப் புலனாய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்று கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குறித்த பதவிகளை வகித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரச வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களைத் தனது தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது குறித்தும் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
