கொல்கத்தாவில் பரபரப்பு: இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல் – பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகர்தலா செல்லவிருந்த இண்டிகோ விமானம் வெள்ளிக்கிழமை மின்னல் தாக்குதலுக்குள்ளானதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
இடியுடன் கூடிய மழை பெய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதுதொடர்பான வானிலை எச்சரிக்கைகளை விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் ஏற்கெனவே விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு பின்னர் மற்றொரு விமானத்தில் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இண்டிகோ நிறுவன தகவலின்படி, தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் இருவர் லேசாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசியதால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
