“பொது இடங்களில் தெருநாய்களை அப்புறப்படுத்த என்ன நடவடிக்கை?”: தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இனப்பெருக்கம்
தெருநாய்கள் தொல்லை குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “கடந்த 4 மாத காலத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளது. இதில் 17 பேர் இறந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடங்களில் விடாமல் அவற்றை பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும். நாய்க்கடி தடுப்பூசி மையங்களில் போதிய எண்ணிக்கையில் கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டது.

அறிக்கை
மேலும், அந்த உத்தரவில், “தெரு நாய் தொடர்பான இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் வகையில், அனைத்து ஐகோர்ட்டுகளும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தெருநாய்களை பொது இடங்களில் அப்புறப்படுத்துவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள் 4 வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

முன்னுரிமை
இந்த வழக்கை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். குறிப்பாக கல்வி நிலைய வளாகங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.