வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அதே வீட்டில் மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு சடலங்களும் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், உறவினர்கள் இருவர் நேற்று மாலை வேளையில் அந்த வீட்டுக்குச் சென்றபோது, தாய் இரத்தக் காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, அதே வீட்டின் மற்றொரு அறைக்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின் (வயது 60) என்ற தாயாரும், அவரது மகனான அஜந்தன் (வயது 35) என்ற இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேற்படி இளைஞர் தனது தாயாரைக் கத்தியால் குத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் ஆரம்பகட்ட சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த வவுனியா குற்றத்தடுப்புப் பொலிஸார் உடனடியாக இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.