இலங்கையின் நிலைமை பதற்றம்! ஆனாலும் அஞ்சோம்!! – கொரோனாவுக்கு முடிவு கட்டியே தீருவோம்.

இலங்கையின் நிலைமை பதற்றம்! ஆனாலும் அஞ்சோம்!! – கொரோனாவுக்கு முடிவு கட்டியே தீருவோம் என்கிறார் இராணுவத் தளபதி

“இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்தான். ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த 26 நாட்களில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இந்த அலைக்குள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கொரோனா வைரஸின் பதற்ற நிலைமையின் உச்சக்கட்டத்தை எடுத்துக்காட்டுகின்றதல்லவா என்று இராணுவத் தளபதியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் வீரியம் கூடியது என்று நாம் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அதன்பின்னர் விஞ்ஞானிகளும் அறிவித்திருந்தார்கள். அதனால்தான் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்றது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாட்டின் நிலைமையைப் பதற்ற நிலைமைக்குக் கொண்டு செல்லாதவாறு கொரோனாவின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை நாம் கட்டுப்படுத்தியிருந்தோம். ஆனால், மூன்றாவது அலையின் தாக்கம் வீரியமாக இருப்பதால் அதனை எம்மால் உடனே கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில், இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்தான். ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம்.

சிலர் கூறுவது போன்று கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் மூடிமறைக்கவில்லை. பி.சி.ஆர். பரிசோதனைகளை எதிர்வரும் நாட்களில் விஸ்தரிக்கவுள்ளோம். முடிவுகள் கிடைத்த கையோடு ஊடகங்கள் வாயிலாக அவற்றை வெளிப்படுத்தி வருகின்றோம். இதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.