அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு – மேலும் வலுவ50டைகின்றன இருதரப்பு உறவுகள்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுகளை முன்னெடுத்தார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 77 ஆண்டுகால நீண்டகால இருதரப்பு உறவுகள் இதன்போது விரிவாக நினைவு கூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் இருதரப்பு மக்கள் தொடர்புகள் போன்ற துறைகளின் ஊடாகச் சிறந்த பன்முக ஒத்துழைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர், அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் சாதகமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றமை இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், ஜூன் 19ஆம் திகதி எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தை நிலையான அமைதியை நோக்கி இட்டுச் செல்லும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை பின்பற்றிய மனிதாபிமானக் கொள்கையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த மார்ச் மாதம் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களுக்குச் சட்டபூர்வமான அடிப்படையில் மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்தது என்றும் குறிப்பிட்டார். இதற்காக இலங்கை எடுத்த காத்திரமான நடவடிக்கைகளை அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

இலங்கையின் ஏற்றுமதியில் தனி நாடாகப் பெரும் பங்கை அமெரிக்கா கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும், இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகள் குறித்தும் இதன்போது பிரதான கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டை, அமெரிக்கா போன்ற பாரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டுடன் ஒப்பிட முடியாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பது கடினமான காரியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்வது அவசியமானது என்றும் குறிப்பிட்டார். இது குறித்து இரு தரப்பினரும் உடன்பாடுகளை எட்டினர்.

இந்த விசேட சந்திப்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருடன், இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹாவல், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட பொருளாதார நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் மெத்தியூ ரிட்ஜ்வே, அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ஷைலஜா கிம் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.