பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை மரணம்! – கிளிநொச்சியில் பெரும் சோகம்.

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்தச் துயரச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மதிய வேளையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பிரமந்தனாறு, ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா என்ற இரண்டு வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம் உயிரிழந்த குழந்தையை அழைத்துக்கொண்டு அவளது தாய் அருகில் உள்ள அயலவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது, தனது கணவருக்கு மதிய உணவு வழங்குவதற்காக அயலவர் வீட்டிலேயே குழந்தையை விளையாட விட்டுவிட்டு, தாய் மட்டும் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர், அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அங்கு காணாததால், பதற்றமடைந்த அயலவர்கள் குழந்தை தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாரா என குழந்தையின் தாயாரிடம் வினவியுள்ளனர். ஆனால், குழந்தை அங்கேயும் இல்லாதமையால் இரு தரப்பினரும் இணைந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

இதன்போது, அந்த வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணறு ஒன்றினுள் குழந்தை விழுந்து கிடப்பதை அவர்கள் அதிர்ச்சியுடன் அவதானித்துள்ளனர். உடனடியாகக் கிணற்றிலிருந்து குழந்தையை மீட்டெடுத்த உறவினர்கள், அவசர அவசரமாகத் தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரேயே அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது என்று அங்கிருந்த கடமை நேர வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தத் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.