அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய ஹெலிகள் உத்தியோகபூர்வமாக விமானப்படையில் இணைப்பு – இரத்மலானையில் ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு.

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சித் திறனை மேம்படுத்துவதற்கும், வான்படைச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச். 57 ‘சீ ரேஞ்சர்’ ரக 10 பல்பயன்பாட்டு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரத்மலானை விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

இரத்மலானை விமானப்படை தளத்துக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் விசேட அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிதாக இணைக்கப்பட்ட ஹெலிகொப்டர்களை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, விமானப்படைப் பணியாளர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ பொறுப்பேற்பை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே விசேட பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் கையெழுத்திடப்பட்டது. இதில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் ஆகியோர் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டனர்.

தற்போது அமுலுக்கு வரும் வகையில் இணைக்கப்பட்டுள்ள இந்த ரி.எச். 57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் கொண்டுள்ள பல்பயன்பாட்டுத் திறன்களின் காரணமாக, எதிர்காலத்தில் பல முக்கிய பாதுகாப்பு மற்றும் சிவில் துறைகளின் ஊடாக இவற்றைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த வான்படைத் தலைமையகம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தப் புதிய ரி.எச். 57 விமானப் படைப்பிரிவின் மூலம் அனர்த்த நிவாரணச் சேவைகள், அவசரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், அவசரப் பொதுமக்கள் சேவை நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பாரிய பலன் கிடைக்கவுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை நடவடிக்கைகளுக்கான இலங்கை விமானப் பணியாளர்களுக்கு சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்தக் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலகளாவிய அமைதிக்காக இலங்கை வழங்கும் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும் எனப் பாதுகாப்புத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து விசேட சரக்கு போக்குவரத்து வசதிகள் மூலம் கடந்த ஜூன் முதலாம் திகதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இந்தக் ஹெலிகொப்டர்கள், இரத்மலானை விமானப்படை தளத்தில் உள்ள வான்பொறியியல் பிரிவில் ஒன்று சேர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் வான்வெளி மற்றும் காலநிலைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பரீட்சார்த்தப் பறப்பு நடவடிக்கைகள் தற்சமயம் முழுமையாக நிறைவடைந்துள்ள பின்னணியிலேயே, இவை உத்தியோகபூர்வச் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, மார்ஷல் ஒஃப் த எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோருடன் விமானப்படை பணிப்பாளர் சபையின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அமெரிக்க தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூர், அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹாவல் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மெத்யூ ஹவுஸ் உள்ளிட்ட சர்வதேச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.