வவுனியா மேயர், சாவகச்சேரி உப தவிசாளர் வடக்கு ஆளுநரால் அதிரடியாகப் பதவி நீக்கம்.

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனினால் இதற்கான உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரு உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளினதும் நடத்தை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்திருந்தார்.

அதன்படி, குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் இறுதி அறிக்கை மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளுக்கு அமைவாகவே, இவர்கள் இருவரும் பதவிகளில் இருந்தும், உறுப்பினர் நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரது பதவி நீக்கம் தொடர்பான ஆளுநரின் விசேட கட்டளைகள் அடங்கிய உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை வடக்கு மாகாண உள்ளூராட்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.