ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? சுரேஷ் சலே விடயத்தில் அவர் துள்ளிக் குதிப்பது ஏன்? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள் பாரிய சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

“இந்த மகா கொடூரத் தாக்குதலுக்கும் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் ஏதேனும் மறைமுகத் தொடர்புகள் காணப்படுகின்றனவா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகின்றது. எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் அவர் பாதுகாப்புத் தரப்பை வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ‘நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-

“நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக தற்போதைய அரசு முன்னெடுத்து வரும் காத்திரமான பல விசேட உத்திகளை நாம் மனதார ஆதரிக்கின்றோம். இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் இளைஞர் சமுதாயமே திட்டமிட்டபடி அதிகளவில் இலக்கு வைக்கப்படுகின்றது. இதனை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும், இதற்கு உழைக்கும் பாதுகாப்புத் தரப்பினர் அனைவருக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளோம்.

இதேவேளை, இலங்கையில் யுத்த காலத்தில் காணாமல்போனோர் விவகாரம் குறித்து பேசிய எமது மதிப்புக்குரிய மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, சுமார் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 644 பேர் வரை காணாமல்போயுள்ளனர் என்று அன்று ஆதாரங்களுடன் கூறியிருந்தார். அவரின் அந்தத் துணிச்சலான வெளிப்படுத்தலே சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று இன்று நீதிக்காக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் புதிய மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை சுமார் 409 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆயர் அன்று கூறிய எண்ணிக்கையை விடவும் தமிழர்கள் இங்கு கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உலகிலேயே மனித எலும்புக்கூடுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பகுதியாகச் செம்மணி மாறிக் கொண்டிருக்கின்றது.

அங்கிருந்து மீட்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் எலும்பு எச்சங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் எந்தளவுக்குக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்திருப்பார்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இவற்றைச் சர்வதேச தரத்தில் மரபணு பகுப்பாய்வு செய்வதற்கான விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரசு கூறியுள்ளது, இதனை எவ்வித அரசியல் இழுபறியுமின்றி உடனடியாகச் செய்ய வேண்டும்.

இவற்றுக்கு மத்தியில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அரசு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதை செய்யப்படுகின்றார், அவர் சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கின்றார் என்றெல்லாம் தற்போதைய சூழலில் பொய்ப் பிரசாரங்கள் கிளம்பும் போது, உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சியில் உள்ள சில இனவாதப் புள்ளிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் துள்ளிக் குதிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் கம்மன்பிலவின் அதீத பதற்றத்தைப் பார்க்கும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அவருக்கும் ஏதேனும் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு உள்ளதா? என்ற நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன. தான் செய்த பிழையை அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் தவறைச் சட்டத்தின் முன்னால் மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு துள்ளுகின்றார். எனவே, பாதுகாப்புத் தரப்பினர் உதய கம்மன்பிலவை உடனடியாகக் கைது செய்து, அவரிடம் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும்.” – என்று செல்வம் அடைக்கலநாதன் சபையில் மேலும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.