யாழில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் மரணம் – சந்தேகநபர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரகு துஷ்யந்தன் (வயது 39) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான வாய்த்தர்க்கம், பின்னர் வன்முறையாக மாறி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது. இதன்போது படுகாயமடைந்த துஷ்யந்தன் உடனடியாக மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரைக் கைது செய்திருந்தனர். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த துஷ்யந்தன், சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மரணம் சம்பவித்துள்ளதை அடுத்து, பொலிஸார் இந்த வழக்கைக் கொலைக் குற்றச்சாட்டாக மாற்றி மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.