கணக்குக் காட்டாத வேட்பாளர்களுக்கு ‘செக்’ – நீதிமன்ற வழக்குகளின் நிலவரத்தை கோருகின்றது தேர்தல் ஆணைக்குழு.

தேர்தல் பிரசார செலவின அறிக்கைகளைச் சட்டபூர்வ காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் தற்போதைய முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

“பிரசார செலவீனங்கள் தொடர்பில் நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறித்த விடயம் சார்ந்த சட்ட நடவடிக்கைகள் எந்தளவில் முன்னேற்றமடைந்துள்ளன என்பது குறித்த விவரங்களை ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்த துல்லியமான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கைகள் அனைத்தும் அடுத்த மாதத்துக்குள் தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தேர்தல் முடிவடைந்து 21 நாள்களுக்குள் நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட விரிவான பிரசார செலவின அறிக்கைகளை வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறியமைக்காகவே நாடு முழுவதும் இவர்களுக்கு எதிராக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.