புத்தளத்தை உலுக்கிய பெரும் துயரம் தோணி கவிழ்ந்து 4 மாணவர்கள் பரிதாபச் சாவு! – தாமரை மலர் பறிக்கச் சென்ற வேளை நேர்ந்த விபரீதம்.
புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி கற்று வந்த, பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16 வயதுடைய நான்கு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
மாணவர்கள் ஐவர் இன்று பிற்பகல் மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியொன்றில் சென்றுள்ளனர். இதன்போது, எதிர்பாராதவிதமாக தோணி நிலைதடுமாறி ஏரியின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தோணி கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்களும் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் பிரதேச மக்களால் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டார். ஏனைய நான்கு மாணவர்களும் கடுமையான போராட்டத்துக்குப் மத்தியிலேயே நீரிலிருந்து மீட்கப்பட்டனர்.
அவர்கள் உடனடியாக வனாத்தவில்லுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், நிலைமை மிக மோசமாக இருந்தமையால் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரே பாடசாலையைச் சேர்ந்த 4 மாணவர்கள் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
