விசாரணை அதிகாரிகளை மாற்றக் கோரி முரண்டுபிடித்த சுரேஷ் சலே இன்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்! – சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் முடிவு.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த அவர், தன்னை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
தொடர்ச்சியான உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், தனது சட்டத்தரணிகள் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றியே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகளின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
