முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவைக் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கைக் கடற்படையில் இணைத்துக்கொண்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இன்று காலை 10:05 மணியளவில் ஆணைக்குழுவின் வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ஷ, கடற்படையின் நிறைவேற்று அதிகாரி பதவிக்குரிய அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்காத நிலையிலும், விதிகளை மீறி அவர் அந்தப் பதவிக்கு ஆள்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், கடற்படையின் நிலையான ஆள்சேர்ப்பு நடைமுறைகளை புறந்தள்ளி, பிரித்தானியாவின் றோயல் கடற்படைக் கல்லூரியில் யோஷித ராஜபக்ஷ பயிற்சி பெறுவதற்காக அரச நிதி (பொதுப்பணம்) பயன்படுத்தப்பட்டது என்றும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த முறைகேடான செயற்பாடுகள் அனைத்தும் இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுவதாகக் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, கைது செய்யப்பட்டுள்ள வசந்த கரன்னாகொடவை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் யோஷித ராஜபக்ஷ ஏற்கனவே கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.