கேப்பாப்பிலவில் இன்று வெடித்தது பெரும் போராட்டம் – 12 ஆவது நாளில் இராணுவ முகாம் வாயிலை முற்றுகையிட்ட மக்கள்.

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 12 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இராணுவ பிரதான வாயிலை முற்றுகையிட்டுப் பாரிய கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவுப் பகுதியில், 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கடந்த 12 நாள்களாகத் தொடர்ந்து பந்தல் அமைத்துப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரை அதிகாரிகளிடமிருந்து உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலுக்கு முன்பாக மக்கள் திரண்டு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாகச் சென்று, தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலைச் சென்றடைந்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தடித்த தொனியில் வலியுறுத்தினர். மேலும், மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொது மண்டபம் ஆகியவற்றையும் இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகப் போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற வழிவகுக்குமாறு அரசிடமும் வடக்கு மாகாண ஆளுநரிடமும் அவர்கள் அவசரக் கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசுகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தங்களது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய மக்கள், தங்களது நிலங்களும் பொதுச் சொத்துகளும் முழுமையாக மீள வழங்கப்படும் வரை போராட்டம் ஓயாது எனப் பிரகடனப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தின் போது, ‘எமது நிலம் எமது உரிமை’, ‘நிலப்பறிப்பு என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்’, ‘இராணுவ நிலைகளை அரச காணிகளுக்குள் உடனடியாக நகர்த்துங்கள்’, ‘இராணுவமே வெளியேறு’, ‘மூதாதையர் பூமி எமக்கு வேண்டும்’ போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் தீவிரமாகப் போராடினர்.

இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் வி.மணிவண்ணன், மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந், அரசியல் செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.யூட்சன், அதன் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதி நே.சங்கீதன், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், கேப்பாப்பிலவு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.