மும்பையில் கனமழைக்கு 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!

மும்பையில் கனமழைக்கு 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் மன்குர்த் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையின்போது, ​​மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹனுமன் கோயிலுக்குப் பின்னால் உள்ள ஜனதா நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர்.

முன்னதாக, சம்பவ இடத்தில் நான்கு முதல் ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, அந்த மூன்று மாடி கட்டடத்தின் ஒரு பகுதியாக இருந்த இரண்டு அல்லது மூன்று குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

இதைத்தொடர்ந்து மும்பை தீயணைப்புப் படை, போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் வகையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்று உள்ளூர் பாஜக கவுன்சிலர் நவநாத் பான் கூறினார். கனமழையால் மீட்புப் பணியில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.