ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

புதுடெல்லி: ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷியா பயணத்தை முடித்துக் கொண்டு 8-ம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, 9-ம் தேதி மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு நியூசிலாந்து செல்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மெல்போர்ன் நிகழ்ச்சி குறித்து முகநூலில் ஆஸ்திரேலியா – இந்தியா ஃபவுண்டேஷன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதுகுறித்து அபுமுஸ்தபா என்பவர் அரபு மொழியில் வெளியிட்ட கருத்தில், ‘பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது ஸ்டேடியத்தின் மேற்கூரையை மூடுவது நல்லது. இல்லாவிட்டால், ஆஸ்திரேலியாவில் அவர் மரணத்தை சந்திப்பார்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியா போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முகநூலில் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த அபு முஸ்தபா என்பவரது ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தமிரட்டல் குறித்து கருத்து தெரிவிக்க ஆஸ்திரேலிய போலீஸார் மறுத்து விட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.