சிறை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலன்களை நேரில் கண்டறிவதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

வைத்தியசாலைக்குச் சென்ற நீதி அமைச்சர், சிகிச்சையிலுள்ள அதிகாரிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தேவையான ஏனைய வசதிகள் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கொடூர மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இந்தச் சம்பவத்தின் போது காயமடைந்த கைதிகளும் பலத்த பாதுகாப்புடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.