கிரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமலுக்கு எதிரான விசாரணை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு – இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை.

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பும் முறையான சட்ட நடைமுறையின் கீழ், இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாகக் கருதப்படும் இரண்டு இந்திய தேசிய சாட்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் அழைப்பாணைகளை அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த காலத்தில் கொழும்பு கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த கிரிஷ் கட்டடத் தொகுதி ஒப்பந்தத்தின் போது, முறைகேடான நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கை நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சிகளை முன்னிலையாகுமாறும் கட்டளையிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.