நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையின்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே வேண்டாம்! – நீதி அமைச்சர் ஹர்ஷனவிடம் சக அதிகாரிகள் கோரிக்கை.

https://we.tl/t-LGYrobv11JVXx1w2

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எவ்வித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அமைச்சரிடம், அங்கு திரண்டிருந்த அதிகாரிகள் குழுவினர் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அன்று, மேற்படி அதிகாரி துரிதமாகச் செயற்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு பாரிய உயிர்ச்சேதங்களும் பெரும் பேரழிவும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தே அவர் தற்காப்புக்காகவும், கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

இதன்போது, இச்சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, முறையான நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதிகாரிகளின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இச்சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் முழுமையான நீதி பெற்றுத்தரப்படும் எனவும் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயன்றமையாலேயே இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில், இச்சம்பவம் குறித்த உயர்மட்டக் குழு விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.