பொத்துவிலில் விபத்தில் சிக்கிய வான் சாரதி பரிதாப உயிரிழப்பு! – பாதயாத்திரை அடியார்களுக்கு உணவு வழங்கிவிட்டு திரும்பிய வேளை நேர்ந்த சோகம்.

அம்பாறை, பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த வான் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த 55 வயதுடைய மார்க்கண்டு ஜெயநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தையில் உணவு தயாரித்துக் கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று, ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது, எதிரே வந்த ஓட்டோவுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. மோதலின் வேகத்தில் இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி வீதியில் கவிழ்ந்துள்ளன. விபத்தால் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த வான் மற்றும் ஓட்டோ ஓட்டுநர்கள் இருவரும், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வான் சாரதியின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கல்முனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், அவர் கல்முனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

ஓட்டோ ஓட்டுநர் தொடர்ந்து பொத்துவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

விபத்து தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.