ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதப் பச்சிளம் குழந்தை பலி! – நெடுங்கேணியில் சோகம்.

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

நேற்று மேற்படி பச்சிளம் குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி முறிந்து சரிந்து விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் குழந்தையின் தாயும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.