வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

வத்தளை, ஹுனுப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது என்று கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால், இந்த மரணம் சுமார் மூன்று நாள்களுக்கு முன்னரே நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் ரயிலில் பயணிக்கும்போது தவறி விழுந்திருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர், நீதிவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.