டெங்கு ஒழிப்புக்காக களமிறங்கும் முப்படை – நாளை முதல் விசேட கூட்டு நடவடிக்கை.

https://www.vishmithacloud.com/s-CMzZV7Av

இலங்கையில் டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் புதிய விசேட கூட்டு ஒழிப்பு செயற்றிட்டமொன்று நாளை வியாழக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 69 ஆயிரத்து 951 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக, இந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 14 ஆயிரத்து 572 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு தொற்று காரணமாக இதுவரை 48 மரணங்கள் சம்பவித்துள்ளன.

தற்போது மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும், தற்போதைய நிலவரப்படி கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். சதவீத அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 20.6 சதவீதமும், கொழும்பு மாவட்டத்தில் 20.2 சதவீதமும் பாதிப்புகள் காணப்படுகின்றன. மேலும், களுத்துறை, கொழும்பு மாநகர சபை எல்லைகள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் டெங்கு பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘தூய்மையான இலங்கை’ திட்டத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன் புதிய விசேட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் ஒரு வார காலத்துக்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கும் தலா 10 குழுக்கள் வீதம் நிறுத்தப்பட்டு, வீடுகள் மற்றும் பொது இடங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஒரு வார காலத்தின் பின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.

பொதுமக்கள் தங்களின் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்தத் தேசியப் பணியில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீர் சேமிப்புத் தொட்டிகள் மற்றும் கொள்கலன்களை முறையாக மூடி வைப்பதுடன், கொசுக்கள் பெருகும் இடங்களை உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும்.” – என்று வைத்தியர் கபில கன்னங்கர, பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கொசுவின் பரவல் எல்லை 150 மீற்றர் வரை உள்ளதால், தனிநபர் பொறுப்புடன் சமூகக் கூட்டுப் பொறுப்பும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.