பயங்கரவாதத்தின் மறுவடிவமே தமிழ் – முஸ்லிம் புதிய கூட்டணி – இப்படிச் சாடுகின்றார் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்க முயலும் புதிய அரசியல் கூட்டணியானது, நாட்டின் வரலாறு, அடையாளம் மற்றும் சிங்கள பௌத்த விழுமியங்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட ஒரு தேசவிரோத வேலைத்திட்டத்தின் வெளிப்பாடாகும் என்று தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்க முனையும் இந்தக் கூட்டணி, போலி ஜனநாயக முகமூடி அணிந்த இனவாதக் கூட்டணியாகும் என்றும் அவர் விமர்சித்தார்.

1974 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக உருவான ‘தமிழீழம்’ என்ற பிரிவினைவாதக் கோட்பாட்டின் மறுவடிவமே இந்தப் புதிய கூட்டணி என்று குறிப்பிட்ட அவர், இது 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாதத்தின் தொடர்ச்சி என்றும் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரான ஒரு தனி தாயகத்தை உருவாக்க இந்தத் தரப்பினர் திரைமறைவில் முயல்கின்றனர் என்றும், இதற்கு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான சில நடைமுறைகள் மற்றும் நிர்வாக வலயங்கள் குறித்தும் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த நுவன் பெல்லன்துடாவ, இவை நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் செயல்கள் என்றார்.

“சிறுபான்மைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்குத் துணை நின்றவர்கள். இன்று அவர்கள் ஜனநாயகம் பேசுவது வேடிக்கையானது. நாட்டின் இறையாண்மையையும் சிங்கள பௌத்த நாகரிகத்தையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே, அனைத்து நாட்டுப்பற்றாளர்களும் தேசத்தை நேசிக்கும் பௌத்த பிக்குகளும் ஒன்றிணைந்து இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும்” என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.