கிளிநொச்சி சம்பவம்: ஜனாதிபதி விசாரணை – அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி மூலம் விசாரித்தார் என்றும், அங்கு இடம்பெற்ற உண்மை நிலையைத் தான் அவருக்கு விளக்கமளித்தார் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அந்தக் கூட்டம் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியது.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.