வலிகாமம் வடக்கு காணிகள் மீட்பு: 13 ஆவது வாரமாகத் தொடரும் மக்களின் அமைதிப் போராட்டம்.

https://we.tl/t-KoQp1Sr38YEAt2Ca

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாகவும் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலிகாமம் வடக்கு, பலாலி மற்றும் மயிலிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், குறித்த பகுதிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே தொடர்ந்து வருகின்றன.

இப்பகுதியில் சுமார் 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு கோரி, உரிமையாளர்கள் பல வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த பல வாரங்களாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பலாலி பகுதியில் உள்ள இராணுவத்தின் ‘கொமாண்டோ’ பங்களா முன்பாக ஒன்றுகூடி, தங்களுக்குச் சொந்தமான காணிகளைத் தமக்கு மீள வழங்குமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து நீண்ட காலம் கடந்தும், இராணுவத்தினர் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறாமையால் தம்மால் தங்களின் பூர்வீக நிலங்களுக்குச் செல்ல முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தங்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்படும் வரை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அமைதி வழியில் இந்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாக காணி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.